×

சென்னை உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு ராணுவத்துக்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாம்

* திருவண்ணாமலையில் இன்று முதல் நடக்கிறது
* கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்

திருவண்ணாமலை, பிப்.10: ராணுவத்துக்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் இன்று தொடங்குகிறது. அதில், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், இந்திய ராணுவத்துக்கான நேரடி ஆட் சேர்ப்பு முகாம் இன்று தொடங்குகிறது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 25 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், மற்றும் ஸ்டோர் கீப்பர், சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த முகாம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதால், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து 17 நாட்கள் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த 25 ஆயிரம் இளைஞர்கள் மட்டுமே இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான அனுமதி நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்காத புதிய நபர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல், முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் அனைவரும், கொரோனா தொற்று பரிசோதனை செய்ததற்கான சான்றை கொண்டு வருவது அவசியம். பரிசோதனை சான்று இல்லாத இளைஞர்களுக்கு முகாமில் பங்கேற்க அனுமதியில்லை. நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள் மட்டும் முகாமில் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளனர். அதில், 500 நபர்களாக பிரிக்கப்பட்டு, கல்விச் சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் 1.6 கிமீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் உள்ளிட்ட உடல் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையில் தகுதி பெறும் இளைஞர்கள், சென்னையில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில், ஆட்சேர்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து, அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சென்னை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்ணல் கவுரவ் சேத்தி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, உணவு, குடிநீர், கழிப்பறை, முதலுதவி சிகிச்சை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், முகாம் நடைபெறும் இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் கேட்டுக்கொண்டார்.

Tags : Direct Recruitment Camp ,Participating Army ,Districts ,Chennai ,
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை