முன்னாள் அதிமுக அமைச்சரின் கல்குவாரிக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

செய்யூர்: மதுராந்தகம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சொந்தமான கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுராந்தகம் அடுத்த குன்னத்தூர் ஊராட்சி தச்சூர் கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் கல்குவாரி அமைக்கப்பட்டு, செயல்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு சொந்தமான கல்குவாரி என தெரிகிறது. கிராமத்துக்கு அருகே, கல்குவாரி அமைக்க தச்சூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு கல்குவாரி அமைத்தால், தங்களது வாழ்வாதாரம்  பெரிதும் பாதிக்கப்படும் என கூறி, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர்.  ஆனால், கல்குவாரி அமைக்கப்படுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை என்று தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தச்சூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூட்டமாக திரண்டு சென்று தச்சூர் - பேக்கருணை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்குவாரி சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன் உத்திரமேரூர் அருகே கல்குவாரியில், மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>