×

பெண்கள் உள்பட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கைது: வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மதுராந்தகம்: அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளின் மாத உதவித்தொகை ₹3 ஆயிரம், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரம், தனியார்துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. சங்க நிர்வாகி சுப.சேகர் தலைமை தாங்கினார். மூர்த்தி முன்னிலை வகித்தார். மதுராந்தகம் எம்எல்ஏ புகழேந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் கே.வாசுதேவன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி.மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.ராஜா, நிர்வாகிகள் பொன்னுசாமி, வி.சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், மதுராந்தகம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசார் 15 பெண்கள் உள்பட 39 பேரை கைது செய்து மதுராந்தகம் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். திருப்போரூர்: திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்ராணி வரவேற்றார். பொருளாளர் திருஞானசம்பந்தன் முன்னிலை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களது பாதுகாப்பாளர் கலந்து கொண்டு பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களுடன் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காத்திருப்பு அறையில் குடியேறினர்.

அவர்களிடம் திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்து, சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தனர். வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகள் சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. ஒன்றிய குழு ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாவட்ட குழு உறுப்பினர் தேசிங், வட்ட குழு உறுப்பினர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாலாஜாபாத் பேரூர் திமுக செயலாளர் பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் வசந்தா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அசோக்குமார், மதிமுக ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், மாற்றுத் திறனாளிகளின் சங்க அமைப்பாளர்கள் முருகன், குமரவேல் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வாளகத்தில் செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடந்தது. சங்க வட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயிணி தலைமையில் குடியேறும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், போராட்டத்துக்கு தடை விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் 300க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மயங்கி விழுந்ததால் பரபரப்பு
உத்திரமேரூர் வட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாற்று திறனாளிகளை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, தாலுகா அலுவக வளாகத்தில், வாடாதவூர் கிராமத்தை சேர்ந்த கிருபா என்ற மாற்றுத் திறனாளிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Arrest ,governor ,women ,office ,
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...