×

சென்னையில் இருந்து தோகாவுக்கு கடத்த முயன்ற 5 கோடி போதைப்பொருள் பறிமுதல்: தொழிலதிபர் உள்பட இருவர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிற்கு சரக்கு விமானம் புறப்பட தயாரானது. அதில் ஏற்ற வந்த பார்சல்களை விமான நிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து டிஜிட்டல் எடை மிஷின்கள் அடங்கிய 7 பார்சல்கள் தோகாவிற்கு அனுப்ப வந்திருந்தன. அந்த பார்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றை பிரித்து சோதனையிட்டனர். அந்த 7 பார்சல்களில் 54 டிஜிட்டல் எடை கருவிகள் இருந்தன. அதன் உள்பகுதிகளில் 4.44 கிலோ உயர் ரக கஞ்சா, 700 கிராம் மெத்தபெட்டமின் என்ற போதைப்பொருள் மற்றும் 1.2 கிலோ போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு 5.10 கோடி. இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், பார்சல்களை சென்னையிலிருந்து கத்தார் நாட்டின் தோகோவிற்கு அனுப்பிய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாகியான தொழிலதிபரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஒரு தனியார் நிறுவன ஏஜென்ட்டையும் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.5.10 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Doha ,Chennai ,businessman ,
× RELATED சில்லிபாயின்ட்…