×

அதிகரிக்கும் வாகன நெரிசலை குறைக்க வைகை ஆற்றுக்குள் தரைப்பாலங்கள்

மானாமதுரை, பிப்.10:  மானாமதுரை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆற்றுக்குள் மாற்று வழிப்பாதைகளான தரைப்பாலங்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை நகரில் மேல்கரையில் பழைய பஸ் ஸ்டாண்டு, மரக்கடை வீதி, தெற்குரத வீதி, அண்ணா சிலை, காந்தி சிலை, குண்டுராயர் வீதி, வாரச்சந்தை ரோடு பகுதிகள் முக்கிய வியாபார மையங்களாக உள்ளன. இப்பகுதிகளில் ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, ஓட்டல், காய்கறி, மளிகை, இறைச்சிக்கடை என 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.     

நகரின் முக்கிய இடமாக இவை இருப்பதால் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் அதிகளவு தங்களுக்கு தேவையானவற்றை பெறுவதற்கு கார், சரக்கு வாகனங்கள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். இதனால் நகருக்குள் பீக் அவர் நேரங்களில் கூட்டம் கூடுகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வர்த்தகத்தினால் கடைகள் வைத்திருப்போர், நடைபாதைகளில் கடை வைத்திருப்போர் கடைகளை விரிவுபடுத்தி வருகின்றனர்.
    
இதனால் 60 அடி அகலம் இருந்த முக்கிய சாலைகள் 15 அடியாக சுருங்கியுள்ளது. மேலும் சரக்கு வேன்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால் பாதசாரிகள், சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் இந்த சாலைகளை கடந்து செல்ல முடியாத வகையில் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்த மெயின் ரோடு வழியாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவிகள்,முதியவர்கள், பெண்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு காலை, மாலை நேரங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.     

இதுதவிர தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கன்னார் தெரு பள்ளிவாசல், அன்புநகர், இளையான்குடி, சிவகங்கைக்கு காரில் செல்வோரும் மெயின் ரோட்டினை கடந்து செல்வதில் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். முக்கிய பண்டிகை தினங்களான தீபாவளி, பொங்கல், சித்திரை திருவிழாக்கள் போன்ற முக்கிய தினங்களிலும், வியாழன் அன்று வாரச்சந்தை நடக்கும் நாட்களில் நெருக்கடி இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வைகை ஆற்றுக்குள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டால் நகருக்குள் நெரிசல் குறையும், விபத்து ஏற்படுவது தடுக்கப்படும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.     

Tags : Ground bridges ,Vaigai River ,
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...