சாயல்குடி கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டைமடியில் மீன் பிடிக்கும் வெளியூர் மீனவர்கள்

சாயல்குடி, பிப்.10:  சீலா மீன் வரத்து அதிகமாக இருப்பதால் சாயல்குடி கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி பகுதியின் மன்னார் வளைகுடா கடல் பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், மூக்கையூர், மேலமுந்தல், வாலிநோக்கம், ஏர்வாடி வரை 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆழமான பகுதியான மேலமுந்தல், கீழமுந்தல், மூக்கையூர், வாலிநோக்கம் கடல்களில் வல்லம், நாட்டு படகுகளில் சென்றும், கரை வலை விரித்தும் மீன் பிடித்து வருகின்றனர்.     

கடந்த சில வாரங்களாக கனமழை, புயல் அபாயம் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்காலிக தடை தற்போது இல்லாததால் ஒரு மாதமாக  இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் விலையானாலும், அதிக விற்பனையாகும் ருசி மிகுந்த சீலா மீன் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் நாட்டு படகு, கரைவலை மூலம் மீன் பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.     

இவர்களுக்கு போட்டியாக இப்பகுதியைச் சேர்ந்த மொத்த மீன் வியாபாரிகள் தனியார் மீன் கம்பெனியினர் சிலர் தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை வரவழைத்து, அதிக கூலி வழங்கி, அதிக குதிரை திறன் வேகம் கொண்ட ஆயில் எஞ்சின் படகுகளில் சென்று, தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர்.  இதனால் பாரம்பரியமிக்க  உள்ளூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என சாயல்குடி பகுதி மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.     

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு, சில வாரங்களாக இனப்பெருக்க கால தடை, புயல், கனமழை பாதிப்பு என தொடர் தடை ஏற்பட்டதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போதுதான் ஒரு மாதமாக விறுவிறுப்பாக மீன்பிடி நடந்து வருகிறது. ஆனால் நண்டு, வாளை, ஊளி, நகரை, சூரை, பாறை, குமுலா, மொரல் போன்ற விலை குறைவான மீன்களை வருகிறது. சீலா, இறால், கட்லா போன்ற மீன் வரத்து இருந்தும், ஆள்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் வசதியில்லாததால், கடலுக்குள் குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் தூரத்தில் பிடிபடுகின்ற மீன்களை பிடித்து கொண்டு வருகிறோம்.     

ஆனால் ஆள்கடல் பகுதியில் ஏற்றுமதி இறால், எடை அதிகம் உள்ள சீலா மீன் வரத்து அதிகம் உள்ளதால் மீன் கம்பெனியினர் அதிக கூலி கொடுத்து, வெளிமாவட்ட மீனவர்கள் மூலம், தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால் குஞ்சு மீன்கள், சிறிய ரக மீன்கள் அழியும் நிலை உள்ளது. மேலும் இறால், சீலா போன்ற விலை மீன்களை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடு ஏற்றுமதிக்கு கொண்டுச் செல்வதால், உள் மாவட்ட பகுதி சில்லரை மற்றும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். கடற்கரைக்கு மீன் வாங்க வரும் பொதுமக்களும் ஏமாற்றமடையும் நிலை உள்ளது. இந்த அத்துமீறல் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினர்.

Related Stories:

>