×

பரமக்குடி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் நோய் அச்சத்தில் மக்கள்

பரமக்குடி, பிப்.10:   ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சியாக பரமக்குடி உள்ளது. 36 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காலங்களில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.
இந்நிலையில் சிறுவர் பூங்கா எதிரில் உள்ள பாசி பவளக்கார தெருவில், கடந்த இரண்டு வாரங்களாக, கழிவுநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்கிய பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளதால், ஒட்டப்பாலம், மஞ்சள்பட்டினம், ஐந்து முனை சாலை பகுதியில் இருந்து காய்கறி வாங்க வரும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட அனைவரும், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும், துர்நாற்றம் வீசுவதோடு, தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகின்றன. இதனால், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடி  பிரதான சாலைகளுக்கு மட்டும் கவனம் செலுத்தும் துப்புரவு ஊழியர்கள், பிற பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும் கால்வாயை தூர்வாரி, கழிவுநீர் சீராக செல்ல, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Paramakudi Nagar ,streets ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...