×

நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.10:  ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் நெல் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் அறுவடை இயந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நடப்பு ஆண்டில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாயம் பாதித்துள்ள நிலையில், தண்ணீரில் அடிபட்டது போக எஞ்சிய நெல் கதிர்களும் தண்ணீரில், சேற்றிலும் சகதியில் இருக்கிறது. இதனை அறுவடை இயந்திரங்கள் மூலம் கதிர் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் அறுவடை இயந்திரங்களுக்கு புரோக்கர்கள் கூடுதல் வாடகை வசூல் செய்வதால் நெல் விவசாயிகள் மேலும் பாதிப்படைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால், அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த பல ஆயிரம் எக்டேர் நெல் கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. மழைக்கு பின்பு வயல்களில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்றி, எஞ்சிய கதிர்களை விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். மழைநீர் வெளியேற்றப்பட்டாலும், கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும், வயல்களில் ஈரப்பதம் காய்வதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரப்பதம் உள்ள வயல்களில் ஜெயின் அறுவடை இயந்திரத்தின் மூலம் மட்டுமே அறுவடை செய்யும் நிலை உள்ளதால், சேலம், தஞ்சாவூர், ஆத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட  பல பகுதிகளில் இருந்து இப்பகுதியில் முகாமிட்டுள்ள இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
மழையால் நெல் கதிர்கள் வயல்களில் சேதமடைந்து வருவதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு புரோக்கர்கள் அறுவடை கூலியை அதிகமாக வசூல் செய்து வருகின்றனர். ஈரப்பதத்தில் அறுவடை செய்யும் ஜெயின் வண்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம், டயர் வண்டிக்கு ரூ.1,700 வசூல் செய்யப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட ஜெயின் வண்டிக்கு ஆயிரமும், டயர் வண்டிக்கு ரூ.500 விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே விவசாயத்தால் நஷ்டத்தை சந்தித்து வருகின்ற நிலையில், மேலும் அறுவடை கூலி உயர்ந்திருப்பது வேதனையாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை