×

சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்களை இடிக்காமல் பறக்கும் பாலம் கட்ட வேண்டும்

திருச்சி, பிப். 10: திருச்சி கலெக்டரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் கட்டிட உரிமையாளர்கள், பொதுமக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5கி.மீ தூரம் கூடுதல் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிந்த அப்போதைய மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு 30 மீ. அகலத்தில் சாலை அமைத்தால் போதும் என்றும், இதில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக தஞ்சை சாலை அசூரில் துவங்கி, கரூர் ரோடு ஜீயபுரம் வரை அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்க உத்தரவிட்டார். தற்போது அரைவட்ட சுற்றுசாலை பணிகளும் 75 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. இது பயன்பாட்டுக்கு வந்தால் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து நெருக்கடி நீங்கி விடும்.
இந்நிலையில் ஒரு தரப்பினர் சாலையை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதால் கூடுதல் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிக்காக கட்டிடங்களை இடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

கோவிந்தராஜுலு அளித்த பேட்டி: பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கி. தூரம் சர்வீஸ் சாலையை விரிவுபடுத்துவது என்பது அரசியல் நோக்கத்தோடு நடக்கிறது. இதை கண்டிக்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தியுள்ளோம். உயர் மட்ட பாலம் அமைப்பது என்பது கட்டிட உரிமையாளர்களுக்கு தரும் இழப்பீட்டு தொகையை விட மிக குறைவாகத்தான் இருக்கும். கட்டிடங்களை இடித்தால் 3 ஆயிரம் கட்டிட உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர். 10ஆயிரம் பேர் வாழ்வாதாரம் இழப்பார்கள். இதற்கு தீர்வு காணாவிட்டால் வரும் தேர்தலை புறக்கணிப்போம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Tags : road ,bridge ,buildings ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...