×

இழப்பீடு இதுவரை இல்லை மக்காச்சோள பயிர் விவசாயிகள் மறியல் டி.கல்லுப்பட்டியில் பரபரப்பு

பேரையூர், பிப். 10:  பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே வையூர், வெங்கடாசலபுரம், கண்ணாபட்டி, மீனாட்சிபுரம், முருகனேரி, காடனேரி, செங்குளம், கோப்பையநாயக்கன்பட்டி, கோபிநாயக்கன்பட்டி, சிலார்பட்டி, சத்திரப்பட்டி, கோபாலபுரம், குச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2018-19ம் ஆண்டில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். இதில் அமெரிக்கன் படைப்புழு தாக்கியதில் ஏராளமான விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாயினர். பயிர்களுக்கு காப்பீடு இன்சூரன்ஸ் கட்டியிருந்தும் இதுவரை இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதுதொடர்பாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் நாராயணசாமி, மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் விவசாயிகள் டி.கல்லுப்பட்டியில் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்மை துறையும், புள்ளியியல் துறையும், இடைத்தரகர் மூலம் காப்பீட்டு நிறுவனத்திடம் தொடர்பு வைத்து கொண்டு அப்பாவி விவசாயிகளை பழிவாங்குகிறார்கள். உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகையை வழங்காமல் இடைத்தரகர் மூலம் மோசடி செய்து வருகின்றனர்.

எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 61 விவசாயிகளை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைது, மாலையில் விடுவித்தனர்.

Tags : crop farmers ,Maize ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு