×

மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஓமலூர், பிப்.10: ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
அமலா ராணி  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர  உதவித்தொகை தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவதை போல  தமிழகத்திலும், குறைந்தபட்சமாக ₹3000 வழங்க வேண்டும். கடுமையாக ஊனமுற்ற  மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹5000 உயர்த்தி வழங்க வேண்டும். தனியார்  துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அரசு  சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை  மாற்றுத்திறனாளிகளை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்தூர்: ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் கந்தன் மற்றும் சங்க தலைவர் பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் விஜயன், ராமமூர்த்தி, இளங்கோ(எ) மாது, சாந்தி, கணபதி, பரமசிவம், பழனிமுத்து, பத்மினி, காந்தி மாவட்ட குழு உறுப்பினர் காளிதாஸ், மாடசாமி, அழகுவேல் ஆகியோர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர்  அலுவலகத்தில் நுழைய முயன்றவர்களை ஆத்தூர் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேட்டூர்:மேட்டூர்  சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியேறும் போராட்டத்திற்கு சேலம் மாவட்ட  தலைவர் அம்மாசி தலைமை வகித்தார். கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஜான்  பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர  உதவித்தொகையாக ₹3,000 முதல் ₹5,000 வழங்க வேண்டும். அரசு துறை காலி  பணியிடங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் சப் கலெக்டர் சரவணனிடம் கோரிக்கை மனு  அளித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்து தனியார்  திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு  ஏற்பட்டது.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...