தென்னக ரயில்வே அறிவிப்பு தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும் ஐ.பெரியசாமி முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

சின்னாளபட்டி, பிப்.10: தேஜஸ் அதிவிரைவு ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமிக்கும், திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மதுரையில் இருந்து சென்னைக்கு நவீன வசதிகளுடன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் சென்னைக்கு 6.30 மணிநேரத்தில் சென்றடைகிறது. இந்த ரயிலை திண்டுக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என சின்னாளபட்டி ஜவுளி வியாபாரிகள் காந்திகிராமம் பல்கலை மாணவர்கள், பேராசிரியர்கள் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து திண்டுக்கல் திமுக எம்பி வேலுச்சாமியிடம் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதையடுத்து தேஜஸ் ரயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி செல்ல வேண்டும் என பாராளுமன்றத்தில் திமுக எம்பி கோரிக்கை விடுத்தார். மேலும் ரயில்வே அமைச்சரிடமும் கோரிக்கை மனு கொடுத்தார். அதன்படி தேஜஸ் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே கூடுதல் இயக்குனர் விவேக்குமார் சின்ஹா அறிவித்துள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், வர்த்தகர்கள், கல்லூரி மாணவர்கள், குறிப்பாக சின்னாளபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். தங்களின் கோரிக்கையை ஏற்று தேஜஸ் அதிவிரைவு ரயிலை திண்டுக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்த ஐ.பெரியசாமி, வேலுச்சாமி எம்பி  ஆகியோருக்கு சின்னாளபட்டி மற்றும் சித்தையன்கோட்டை, செம்பட்டி, ஆத்தூர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: