×

கொடைக்கானலில் பிளாஸ்டிக் கேனுக்கு தடை குடிநீருக்கு திண்டாடும் சுற்றுலா பயணிகள்: காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் ஏடிஎம் இயந்திரம்

கொடைக்கானல், பிப்.10: கொடைக்கானலில் நகராட்சியின் அலட்சியத்தால் குடிநீர்  கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதற்கு இந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தடை விதிக்கப்பட்டது. பெயரளவிற்கு கொடைக்கானல் நகர் பகுதியில் வியாபார சங்க நிர்வாகிகளுடன் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிப்ரவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அறிவித்தார். ஆனால் கொடைக்கானல் நகராட்சி எந்த ஒரு முன்னேற்பாடுகளையும் செய்யாமல் அலட்சியப் போக்குடன் இந்த தடை உத்தரவை பிறப்பித்து உள்ளதால், சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது குடிநீர் பாட்டில்கள் கொடைக்கானல் நகர் பகுதியில் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘வியாபார நிறுவனங்களில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்கப்படுவதில்லை. மாறாக ஐந்து லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக சுற்றுலா பயணிகள் தங்களது தாகத்தை தீர்ப்பதற்கு ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் 15 இடங்களில் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது. இது வெறும் அறிவிப்பாகவே  உள்ளது. சுமார் ஐந்து இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைப்பதற்கு நகராட்சி மிக மிக தாமதமாக பெயரளவிற்கு நடவடிக்கை எடுத்து உள்ளது.

வெறும் பிளைவுட்  அட்டைகள் கொண்ட அமைப்பை மட்டும் தற்போது வைத்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். விரைவில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை அமைத்து சுற்றுலா பயணிகளின் தாகத்தை தீர்க்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி நகராட்சி உதவி பொறியாளர் பட்டுராஜன் கூறுகையில், ‘‘நகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் 15 இடங்களில் குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும். அந்த இயந்திரங்களை தனியார் பராமரித்து ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணத்தில் குடிநீர் வழங்குவார்கள். இதை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...