×

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

திண்டுக்கல், பிப்.10: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற  மாநிலங்களைப்போல் மாற்றுத்திறனாளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரம்  வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார்துறை பணிகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின், திண்டுக்கல் நகர செயலாளர் ஸ்டாலின் உட்பட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். போராட்டத்தை முன்னிட்டு கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலை காவல்துறையினர் பூட்டி வைத்திருந்திருந்தனர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பழநி:  பழநி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு உயரம் தடைபட்டோர் சங்க மாநில செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் காளீஸ்வரி, செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முடியாதபடி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். இதனால் பழநி-புதுதாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து சாலையிலேயே உணவருந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

செம்பட்டி:  செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பாய்படுக்கையுடன் குவிந்த மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். எனவே அவர்கள் செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் மாற்றுத்திறனாளிகள் 250 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.

Tags : Immigration Struggle ,
× RELATED தமிழக பட்ெஜட் தாக்கல் செய்யும் நாளில்...