×

1000 குடும்பங்கள் பிழைக்க வழியில்லை மார்க்கெட்டை இடிக்க வியாபாரிகள் எதிர்ப்பு

திருப்பூர்,பிப்.10:திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி துவங்கப்பட்ட இந்த தினசரி மார்க்கெட்டில் சுமார் 450 கடைகள் உள்ளது. இதில் 250 காய்கறிக்கடைகளும், 30க்கும் மேற்பட்ட மளிகை கடைகளும், பூக்கடைகள்,உணவகங்கள்,செருப்பு கடைகள்,எண்ணெய் கடைகள் உள்ளிட்ட தினசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு ரூ.20 முதல் ரூ.300 வரை மாநகராட்சியால் தினசரி வாடகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடைகள் பழைய பஸ் நிலையத்திற்கு எதிரில் செயல்பட்டு வருவதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் எளிதாக தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்த முடிகிறது.

இந்நிலையில், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் விதமாக ஸ்மார்ச் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த தினசரி மார்க்கெட்டை இடித்து தரைமட்டம் செய்து விட்டு அடுக்குமாடி கடைகள் கட்டுவதற்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் இன்று இடிப்பதாக கூறி சென்ற நிலையில் இங்கு கடைகளின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது மார்க்கெட் வியாபாரிதங்கமுத்து கூறியதாவது: இந்த மார்க்கெட்டில் பலர் 30 ஆண்டுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறார்கள். முன்பு இந்த மார்க்கெட் தற்போதுள்ள பழைய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்தக்கூடிய இடத்தில் வண்டிப்பேட்டையாக செயல்பட்டு வந்தது. அப்போது இருந்த திருப்பூர் நகராட்சி நிர்வாகம் இதே போல எங்களை காலி செய்யும்படி கூறியது. இதை எதிர்த்து அனைவரும்  மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய பின்னர்தான் தற்போதுள்ள மார்க்கெட்டை கொடுத்தார்கள்.

கடைகளும் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. எங்களை பொருத்த வரை தினசரி மார்க்கெட் தினசரி மார்கெட்டாக தான் இருக்க வேண்டும். இந்த மார்க்கெட்டால் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தற்போது மத்திய அரசின் கொள்கையில் ஒன்றான சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று அறிவித்து அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அடுக்குமாடி கடைகள் அமைத்து வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் முடிவாக தான் இந்த முடிவு உள்ளது.

நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைகள் நல்ல நிலையில் தான் உள்ளது. இதை இடிக்க வேண்டாம், நல்ல படியாக தளம் அமைத்து கொடுத்து வாடகையை  கூட உயர்த்திக் கொள்ளுங்கள் என கூறினோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இது தொடர்பாக அனைவரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.

இது குறித்து மாநகராட்சி கமிஷ்னர் சிவக்குமாரிடம் கேட்டபோது: இந்த தினசரி மார்க்கெட் இடிக்கும் விவகாரம் தொடர்பாக கடைகாரர்களுக்கு ஓராண்டுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்து விட்டோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட், மீன் மார்க்கெட் ஆகிய 4 மார்க்கெட்களும் உள்ளது. இதில் 3 மார்க்கெட்டுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட் மட்டும் பாக்கி உள்ளது. இந்த தினசரி மார்க்கெட் கடைகளுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்குள் கடைகளை தருவதாகவும் கூறியுள்ளோம்.
இனிமேல் கடைகாரர்கள் தான் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : families ,Merchants ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...