திருப்பூரில் முட்புதர் மண்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம்

திருப்பூர், பிப்.10:திருப்பூர் பி.என்.ரோட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம் முட்புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் பொதுமக்களுக்கான கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பல லட்சம் ரூபாய் செலவில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

இதேபோல் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் அருகிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் முட்புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த இரு கழிப்பிடங்களுக்கு செல்லும் பாதையை அடைத்து பல்வேறு பொருட்கள் போடப்பட்டுள்ளன. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்ட கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் பொதுவான கழிப்பிடங்களுக்குள் மிகுந்த சிரமத்துடன் சென்று வரும் அவல நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சிலர் வேறு வழியின்றி திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories:

>