உடுமலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை

உடுமலை,பிப்.10: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரின் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் முதலிடம் பிடிப்பது தளி சாலையாகும். உடுமலையிலிருந்து திருமூர்த்தி மலை, அமராவதி, மூணார் மற்றும் ஆனைமலை பகுதிகளுக்கு செல்ல பயன்படும் முக்கிய வழித்தடம் இந்த சாலையாகும். அதுமட்டுமல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம்,தாலுகா அலுவலகம்,நீதிமன்றங்கள் மற்றும் ஏராளமான கிராமங்களுக்கு செல்லும் வழித்தடமாகவும் தளி  சாலை உள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தினசரி போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்துதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் சிறு சிறு விபத்துகளும், விவாதங்களும், மோதல்களும், முணுமுணுப்புகளும் தொடர்கதையாகவே உள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணவேண்டிய போக்குவரத்து  போலீசாரைக்காணவில்லை என்று சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் புகார் மனு அளிக்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தளி சாலை மட்டுமல்லாமல் மத்திய பஸ் நிலைய ரவுண்டானா, தாராபுரம் சாலை சந்திப்பு என எந்த முக்கிய பகுதியிலும் போக்குவரத்து போலீசாரைக்கான முடியாததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனங்களை இயக்கி போக்குவரத்து நெரிசலை பலமடங்கு அதிகப்படுத்தி விடுகிறார்கள்.

இந்த பிரச்னைக்குத் தீர்வாக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அந்த வகையில் பொள்ளாச்சி சாலை சந்திப்பிலிருந்து குட்டை திடல் வரையிலான தளி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட வேண்டும். தற்போதைய நிலையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் தளி சாலை வழியாகவும், திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உடுமலைக்கு வரும் வாகனங்கள் சங்கிலி வீதி, சதாசிவம் வீதி வழியாக பொள்ளாச்சி சாலையை அடையும் வண்ணம் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யலாம். இதன்மூலம் தளி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது.

மேலும் உடுமலை நகரின் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான   வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து செயல்படுத்த முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சாலையோரங்களில் விதிகளை மீறி தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனகளை பறிமுதல் செய்தாலே பாதி போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Related Stories:

>