×

புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிக்கும் அபாயம்

தஞ்சை, பிப்.10: புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் வராததால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகி வருகிறது என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கூறினர். தஞ்சை மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்தார். விவசாயிகள் கூட்டம் தொடங்கிய உடன், டில்லியில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புதிய வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதில் மத்திய அரசின் பாராமுகத்தை கண்டித்தும், தமிழக அரசு சட்டமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாய சங்க நிர்வாகிகள் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ஜீவக்குமார், கோவிந்தராஜ், வீரசேனன் உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் கருப்பு துண்டுடன் கூட்டத்திலிருந்து முழக்கமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர். பின்னர் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

வெண்டாக்கோட்டை வீரசேனன்: தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளை தினமும் நடக்கிறது. இதில் சில இடங்களில் வருவாய்த்துறையினர் மணல் லாரிகளை பிடிக்கின்றனர். ஆனால் அந்த மணல் இதுவரை ஒரு இடத்தில் கூட ஏலம் விட்டதாக தகவல் இல்லை என்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார் பேசும்போது, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் வராததால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நீரின்றி கருகி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வந்த உடன் நேரடியாக பார்வையிட்டார். அதே சமயம் இதுவரை நீர் வராததால் 5 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அக்னியாற்று பகுதிகள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் உள்ளன. இதனால் தண்ணீர் வராமல் இதன் சாகுபடி நிலங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டது. எனவே அக்னியாறு பாசன உரிமையை வரும் காலங்களிலாவது முறைப்படுத்தி இப்பகுதிகள் பாசன வசதி பெற தனி கூட்டத்தை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் பதிலளிக்கும்போது, புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறப்பது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டருடன் பேசியுள்ளேன். 2 நாட்களில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன் பேசும்போது, இந்திய விவசாயிகளின் நலனிற்கு எதிராக இயற்கை வழி வேளாண்மைக்கு எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தும், தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள கூட்டுறவு கடன் தள்ளுபடி திட்டத்தில் குறு, சிறு, பெரிய விவசாயி என்ற பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளின் அனைத்து வித கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர், நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சம்பா சாகுபடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் கோடை சாகுபடிக்கு குறைந்தது 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றார்.

Tags : command upland canal ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு