×

பிரதமர் மோடியின் விசிட்டும் பொய்யான விளம்பரங்களும்: இந்த முறையும் தமிழக விவசாயிகள் வச்சி செய்யப் போறாங்க

தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றத் துடிக்கும் பாஜ, பிரதமர் மோடியை அரசு செலவில் அழைத்து வந்து தேஜ கூட்டணிக்காக பிரசாரம் செய்ய வைக்கிறது. மோடி வருவதற்கு முன்பாகவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு ‘செஞ்சி கிழிச்ச’ சாதனைகளை அரசு செலவில் பக்கம் பக்கமாக வெளியிடுகின்றனர். சமீபத்தில் மதுரைக்கு மோடி வருகையையொட்டி ஒன்றிய அரசு சார்பில் விவசாயிகள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் “தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் காக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என்றும், “பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதித் திட்டத்தின் (PM-KISAN) கீழ் 47 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 12,700 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கை எப்படிப் பெருக்கி, வகுத்துப் பார்த்தாலும் இடிக்கிறது. 47 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் என்றா? அல்லது 47 லட்சம் விவசாயிகளுக்கு 7 ஆண்டுகளில் தலா ரூ. 6 ஆயிரம் என்றா? 47 லட்சம் என்பது 7 ஆண்டுகால தமிழக விவசாயப் பயனாளிகளின் எண்ணிக்கையா? என்று ஒன்றும் புரியவில்லை. விவசாயிகளுக்கு இந்த நிதி வழங்கத் தொடங்கியது 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று. ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஒரு விவசாயிக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது.

முதல் தவணை வழங்கியபோது தமிழ்நாட்டு விவசாயிகள் 21.61 லட்சம் பேர் பயனாளிகளாக இருந்தனர். அது 2022இல் 12ஆவது தவணை வழங்கியபோது 20.06 லட்சமாகக் குறைந்தது. 2025 நவம்பர் 19 அன்று கோவையில் 21ஆவது தவணை வழங்கப்பட்டபோது, பயனாளிகளின் எண்ணிக்கை வெறும் 3.19 லட்சம் பேர்தான். இது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’ தான். ஆதார் இணைப்பு, நில ஆவணங்கள் இணைப்பு எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, ஒன்றிய பாஜ அரசு, விவசாயிகளை ‘கழித்துக்கட்டும்’ வேலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருகிறது ஒன்றிய அரசு.

விவசாயிகளுக்கான இந்த நிதி வழங்கல் ஒன்றிய பாஜ அரசு, தாராள மனம் கொண்டு வழங்கப்படவில்லை. விளைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கேட்டும், விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஓராண்டுக்கும் மேலாக நடந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதற்காகக் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. அந்தப் போராட்டத்தால் ஏற்பட்ட கோபத்தைத் தணிப்பதற்காகவே, இந்த நிதி வழங்கல் எனும் கண்துடைப்புத் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு தொடங்கியது. அதையும் படிப்படியாகப் பல காரணங்களைக் கூறி, பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டே வருகிறது.

இந்த ஏமாற்று வேலையை மறைக்கவும், மோசடியை மூடி மறைக்கவும் பொய்யான புள்ளிவிவரங்களை விளம்பரங்கள் என்ற பெயரில் தருகிறது ஒன்றிய பாஜ அரசு. இதை விவசாயிகளும் தமிழ்நாட்டு மக்களும் நம்ப மாட்டார்கள். மோடி வித்தை தமிழகத்தில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே பலிக்காது என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தக் கோரி விவசாயிகளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒன்றிய பாஜ அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஒன்றிய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பியதே அன்றி, ஈரப்பத அளவை அதிகரிக்கவே இல்லை. சரி, அந்த ஆண்டுதான் முடிந்தது, அடுத்த ஆண்டாவது செய்தார்களா? அதுவும் இல்லை. மோடி அரசின் விளம்பர வித்தை தமிழகத்தில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே பலிக்காது என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

Tags : Modi ,Tamil Nadu ,BJP ,Teja alliance ,Union government ,
× RELATED பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக..!!