சர்க்கரை ஆலையை அரசே நடத்த கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாபநாசம்,பிப்.10: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே அமைந்துள்ள திருமண்டங்குடி திருஆரூரான், திருவிடைமருதூர், கோட்டூர் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசத்தில் நடைபெற்றது. பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக தஞ்சை வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் கல்யாணசுந்தரம் பேசினார். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாண்டியன் கண்டன உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது: காலம் கடந்து விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 சதவீத சாகுபடி பரப்பை கொண்டுள்ள டெல்டா பகுதிக்கு ரூ.2300 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சேலம், ஈரோட்டிற்கு ரூ.2500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் முருகன், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மாநில செயலாளர் ஷாஜகான், வி.சி கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். திமுக பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் நன்றி கூறினார்.

Related Stories: