×

விசைத்தறியாளர்களுக்கு 6 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடிப்பு

சோமனூர், பிப்.10:  கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் விசைத்தறியாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டித்து விரைவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கோவை திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் சாதாரண விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் சோமனூர் பகுதியிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் பகுதிகளிலும் அதிகளவில் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. அதில், பெரும்பாலான விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் நெசவு செய்யக்கூடிய விசைத்தறியாளர்களாக உள்ளனர். இவர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு மற்றும் நூல்களைப் பெற்றுக்கொண்டு துணி உற்பத்தி செய்து கொடுத்து மீட்டர் அடிப்படையில் நெசவு கூலியை பெறுகின்றனர்.

இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த கூலி உயர்வு ஒப்பந்தம் வழக்கமாக மாவட்ட தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒப்பந்த கூலியை பெறுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்த கூலியைகூட இதுவரையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறியாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது, 6 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட கூலி உயர்வு வேண்டி விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவற்றை கோவை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் கடந்த மாதம் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை, அதனால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது: கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒப்பந்த கூலியை இதுவரை முழுமையாக வழங்கப்படாத நிலையில், 2016ம் ஆண்டு நடத்தப்படாமல் விடப்பட்ட ஒப்பந்தக் கூலி உயர்வு, மற்றும் 2019ம் ஆண்டு நடந்த மூன்று கட்ட ஒப்பந்த கூலியையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அமல்படுத்தி  வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இரண்டு கட்ட கூலி உயர்வையும் சேர்த்து 50 சதவீத ஒப்பந்த கூலி அமல்படுத்த வேண்டும்.

ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து கூலி உயர்வு வழங்காமல்  புறக்கணித்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு இருக்கக் கூடிய விசைத்தறிகளில் 15% விசைத்தறிகள் பழைய இரும்புக்கு விற்றுவிட்டு விசைத்தறி தொழிலை நடத்த முடியாமல் தொழில் முடக்கப்பட்டுள்ளது. விதைத்தறி தொழிலை பாதுகாக்க கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு அதிகாரிகளும் விசைத்தறியாளர்கள் நிலைமையை கருத்தில் கொண்டு கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் விரைவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு