×

தேசிய மீட்பு குழுவினரின் பேரிடர் கால தற்செயல் ஒத்திகை பயிற்சி

புதுக்கோட்டை, பிப். 10: புதுக்கோட்டையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் பேரிடர் கால தற்செயல் ஒத்திகை பயிற்சி தத்துரூபமாக நடந்தது. இதை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து பயனடைந்தனர். சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நகர பகுதியில் உள்ள புதுகுளத்தில் பேரிடர் கால தற்செயல் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். துணை கமாண்டோ ராஜன்பாலு தலைமை வகித்தார். புதுக்குளத்தில் நடந்த ஒத்திகையில் நீர்நிலைகளில் 2 படகுகள் ஒன்றோடு ஒன்று எதிர்பாராத வகையில் மோதி கொண்டு படகில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தால் அவர்களை எவ்வாறு மீட்டு கரைக்கு கொண்டு வருவது, தண்ணீரில் மூழ்கி காணாமல் போனவர்களை எவ்வாறு தேடி அவர்களை மீட்பது, வீட்டில் இருக்கும் பொருட்களான தர்மாகோல், வாட்டர்கேன், வாழைமரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி எவ்வாறு நம்மை தற்காத்து கொள்வது என்று தத்ரூபத்துடன் செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.

மேலும் தண்ணீரில் விழுந்த அவர்களை மீட்டவுடன் எவ்வாறு அவர்களுக்கு முதலுதவி கொடுப்பது, உயிருக்கு ஆபத்தான அவர்களை உடனடியாக மருத்துவ உதவி கொடுத்து அவசர ஊர்தியில் எப்படி அனுப்பி வைப்பது, பேரிடர் ஏற்பட்டால் எப்படி மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிப்பது, தகவல் வந்தவுடன் எவ்வாறு பேரிடர் மீட்பு படையினர் செயல்படுவார்கள் என்பதை செயல்விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இதில் தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ துறையினர், வருவாய்த்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு செய்முறை விளக்கத்தை பார்வையிட்டு பயனடைந்தனர்.

இதன்பின்னர் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த துணை கமாண்டோ ராஜன்பாலு நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், நாடு முழுவதிலும் 750 மாவட்டங்களில் மூன்றாண்டுக்குள் அனைத்து இடங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெரிய அளவில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை செய்ய வேண்டுமென அறிவுறுத்தினாரை். அதன்படி புதுக்கோட்டையில் இந்த ஒத்திகை பயிற்சி நடந்தது. புதுக்கோட்டையை பொறுத்தவரை 50 கிலோ மீட்டர் கடல் பகுதி, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளதால் இந்த ஒத்திகை பயிற்சி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடந்தது.

2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளமும், 2018ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளமும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. ஆறுகளில் பேரிடர் ஏற்பட்டால் மீட்புப்பணி சற்று சுலபமாக இருக்கும். ஆனால் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்டால் அது சவால் நிறைந்ததாக இருக்கும். ஆழ்துளை கிணறுகளில் குழந்தை சிக்கி கொண்டு பின்னர் மீட்பது என்பது சவால் நிறைந்ததாக உள்ளது. தன்னார்வலர்கள் தொடர்ந்து பல கருவிகளை கண்டுபிடித்து வருகின்றனர். அரசும் இதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறது. விரைவில் நிரந்தரமான கருவிகள் வந்து விடும். தமிழக பேரிடர் மீட்பு படையினருக்கு தேவையான பயிற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொடுத்து வருகிறது என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ