×

தேர்தல் பிரசாரத்திற்கு கட்சி தலைவர்கள் வருகையால் பரபரப்பான கரூர் மாவட்டம்


கரூர், பிப்.10: தேர்தல் பிரசாரத்திற்கு கட்சி தலைவர்களின் வருகை காரணமாக கரூர் மாவட்டம் பரபரப்புடன் காணப்படுகிறது. 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்ற இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் இந்த முறை போட்டி அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே, முக்கிய தலைவர்களின் வருகை காரணமாக கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த டிச.16ம்தேதி அன்று தமிழக முதல்வர் ஆய்வுப் பணிக்காக வந்து சென்றார்.

இவருக்கு அடுத்தபடியாக, கடந்த மாதம் திமுக தலைவர் மக்கள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கரூர் வந்து சென்றார். இதனையடுத்து, கடந்த மாதம் 25ம்தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கரூர் மாவட்டத்தில் ஒரு நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு சென்றுள்ளார். மேலும், பிப். 7 மற்றும் 8ம்தேதி அன்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு தேனி சென்றுள்ளார். அடுத்தடுத்து, கரூர் மாவட்டத்திற்கு கனிமொழி, திரும்பவும் தமிழக முதல்வர் போன்றோர் வரவுள்ளனர் என கூறப்படுகிறது. முதற்கட்ட சுற்றுப்பயணமே இன்னும் முடிவடையாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மேலும், அனைத்து கட்சி தலைவர்களும் கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை துவக்குவார்கள் என்பதால் இப்போது இருந்தே கரூர் மாவட்டம் பரபரப்புடன் காணப்படுகிறது.

Tags : Karur district ,party leaders ,election campaign ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...