×

அம்மாபேட்டை சின்னகடை தெருவில் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு

*பெருக்கெடுத்து வீணாக ஓடும் தண்ணீர்

தஞ்சாவூர் : அம்மாபேட்டை சின்ன கடை தெரு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் பதியப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து குடிநீர் ஓடி வீணாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாபேட்டையில் இருந்து மகிமாலை உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அம்மாபேட்டை சின்ன கடை தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் அதிகளவில் செல்கிறது.

இது குறித்து அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலரிடம் கேட்டதற்கு இது பேரூராட்சி சார்பில் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை கேட்டதற்கு இது குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என கூறுகிறார்கள்.

எந்த திட்டத்தில் தண்ணீர் வழங்கப்படுகிறது என அலுவலர்களுக்கு தெரியாத நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது.

மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் ஓடுவது போல் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ammapettai ,Chinna Kadai Street ,Thanjavur ,Water Supply Board ,
× RELATED சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5...