×

தோவாளை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பூதப்பாண்டி, பிப்.9: தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு, பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. முன்னதாக காலை 10.15 மணியளவில் தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் பூதலிங்கம் பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஷ்வரி, ஞானபாய் ஆகிய 3 பேரும் சேர்ந்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சாலிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், தோவாளை ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார் சில தினங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் ஒரு ஆடியோவை வெளியிட்டார். அதில் ஒன்றிய கவுன்சிலர் 10வது வார்டில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், ஒப்பந்தகாரரிடம் பொதுநிதியில் ஒப்பந்தம் கோரப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் ெதரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கூட்டம் நடத்த ஒன்றிய குழு தலைவருக்கு உரிமை இல்லை. அந்த முறைகேடுகளை விசாரித்து விட்டு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 11 மணிக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 5 அதிமுக கவுன்சிலர்கள், 1 பாஜ, 1 சுயேட்சை கவுன்சிலர்கள் கலந்து கொண்டு. தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரம் 3 திமுக கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால் போராட்டம் நடத்திய 3 கவுன்சிலர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை திமுக கவுன்சிலர்கள் கைவிட்டனர்.

Tags : councilors ,DMK ,meeting ,Tovalai Panchayat Union ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...