குன்றத்தூர், மார்ச் 2: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரை சேர்ந்தவர் கோபி (44). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஆதித்யா (17) என்ற மகனும் உள்ளனர். சிறுவன் ஆதித்யா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற ஆதித்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஆதித்யா ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மவுலிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுவன் ஆதித்யா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மன அழுத்தத்தின் காரணமாக ஆதித்யா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவன் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
