×

மணிவாசகம் உடல் தகனத்தின்போது பழி வாங்குவதாக சபதம் தலைமறைவான 7 மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை பிடிக்க தீவிரம் கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

சேலம், பிப்.9: சேலத்தில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல் தகனத்தின் போது, பழி வாங்குவதாக கோஷமிட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர்களில் இன்னும் 7 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான 3 பேரை ஆத்தூர் சிறையில் அடைத்தனர். ஓமலூர் அருகேயுள்ள கணவாய்புதூர் கிராமம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்டான இவரை, கேரள வனப்பகுதியில் வைத்து தண்டர்போல்ட் சிறப்பு அதிரடி படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பின்னர், மணிவாசகம் உடலை அவரது மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி ஆகியோர் பெற்று வந்து, சேலம் ராமமூர்த்தி நகர் சுடுகாட்டில் தகனம் செய்தனர். அப்போது கூடியிருந்த அவரின் ஆதரவாளர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினரும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதில், ஆயுதம் ஏந்துவோம், ரத்த கடனை ரத்தத்தால் பழி தீர்ப்போம் என கோஷமிட்டனர்.

இதுபற்றி கே.என்.புதூர் விஏஓ சங்கர் அளித்த புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, கோஷமிட்ட மாவோயிஸ்ட்கள், மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன் மற்றும் மதுரையை சேர்ந்த விவேக், காடையாம்பட்டி சுதாகர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து, தலைமறைவான 10 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களான சேலம் மின்னாம்பள்ளி ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த செல்வராஜ் (55), ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டியை சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வநகரை சேர்ந்த சீனிவாசன் (66) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களை ஓமலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, ஆத்தூர் சிறையில் அடைத்தனர்.

 இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை பிடிக்க, எஸ்பி தீபாகனிகர் உத்தரவிட்டுள்ளார். இதனால், டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான தனிப்படையினர், ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அவர்கள், தற்போது எங்குள்ளார்கள்? என தனிப்படை போலீசாரும், சேலம் கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் சிலரை கைது செய்து விடுவோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : supporters ,Maoist ,cremation ,Manivasak ,
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...