×

ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ளவை பிரிப்பு மாவட்டத்தில் புதியதாக 512 வாக்குச்சாவடிகள் அமைப்பு

நாமக்கல், பிப்.9: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் 1,623 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு, புதியதாக 512 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை ஆண்கள் வாக்குச்சாவடி, பெண்கள் வாக்குச்சாவடி என ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுவரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் (தனி) தொகுதியில் புதியதாக 86 வாக்குச்சாவடிகள், சேந்தமங்கலத்தில் 75, நாமக்கல் 100, பரமத்திவேலூர் 79, திருச்செங்கோடு 76 மற்றும் குமாரபாளையத்தில் 96 என மொத்தம் 512 வாக்குச்சாவடிகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,135 ஆக அதிகரித்துள்ளது. 18 வயது நிரம்பிய 27 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருக்கிறார்கள். அவர்கள் பட்டியலில் சேர்க்க விரைவாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆர்டிஓ கோட்டைக்குமார், தாசில்தார் சுப்ரமணியம்,  திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், நகர அதிமுக துணைச் செயலாளர் நரசிம்மன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : polling stations ,separation district ,voters ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...