×

நாமக்கல்லில் தினசரி 50 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் விற்பனை

நாமக்கல், பிப். 9: நாமக்கல்லில் ரிக் லாரி உரிமையாளர்கள், கடந்த 3 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டீசல், ஆயில் மற்றும் மூலப்பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், வேலகவுண்டம்பட்டியில் செயல்படும் நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கம், இந்த போராட்டத்தில் நேரடியாக தலையிடாமல், சங்க உறுப்பினர்கள் சிலர் மட்டும் முன்னின்று நல்லிபாளையம் பைபாஸ் இணைப்பு சாலை பகுதியில் 25 ரிக் லாரிகளை நிறுத்திவைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறு இல்லாத பகுதி என்பதால், போலீசாரோ, அதிகாரிகளோ இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. ரிக் லாரி உரிமையாளர்கள் இடையே ஒற்றுமை இல்லாததால், போராட்டம் தொடர்கிறது. டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரிக் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்தாலும், அதற்கு பெரிய ரிக் லாரி உரிமையாளர்கள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

இந்த பிரச்னை குறித்து நேற்று போராட்ட குழுவினர் ஆலோசித்தனர். தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் பகுதியில் கலப்பட டீசல் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. தினமும் 50 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் விற்பனையாகிறது. பெட்ரோல் பங்க்கில் விற்பனை செய்யப்படும் டீசலை விட, லிட்டருக்கு ₹10 குறைவாக கிடைப்பதால், பெரிய ரிக் உரிமையாளர்கள் தினமும் 1000 லிட்டர், 2 ஆயிரம் லிட்டர் என கலப்பட டீசலை பிடித்துக் கொள்கிறார்கள். சட்ட விரோதமாக நடைபெறும் இந்த கலப்பட டீசல் விற்பனையை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எந்த வகையிலும் தடுப்பதில்லை.

இதனால் நாமக்கல்லில் உள்ள முக்கிய சாலைகளில், 10 டீலர்கள் கலப்பட டீசலை தினமும்  விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலைக்கு டீசலை வாங்குவதால், குறைந்த விலைக்கு ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க, பெரிய ரிக் லாரி உரிமையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒரு வண்டி, இரண்டு வண்டி வைத்து தொழில் நடத்தும் உரிமையாளர்கள், குறைந்த விலையில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க முடியாது. ஒரு அடிக்கு ₹12 வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவர் மத்தியிலும் கருத்தொற்றுமை ஏற்படும் வரை, எங்கள் ரிக் லாரிகளை நிறுத்தி வைப்பதை தவிர வேறு வழியில்லை.  இவ்வாறு போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

Tags : Namakkal ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை