சாக்கடை கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தை மூடக்கோரி மா. கம்யூனிஸ்ட் சாலை மறியல்

திருச்செங்கோடு, பிப். 9: திருச்செங்கோடு நகராட்சி 15வது வார்டு காட்டுவளவு என்ற பகுதியில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு சாக்கடை கால்வாய் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பள்ளத்தையும் மூடவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காட்டுவளவு பகுதியை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில், திருச்செங்கோடு - வெப்படை சாலை மாரியம்மன் கோயில் முன்பு மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்கடை கால்வாய் பணிகளை துவக்கி விரைந்து முடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்த மறியலால் போக்குவரத்து தடைப்பட்டது.  

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 10 பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே காட்டுவளவு பகுதிக்கு சென்ற நகராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரம் மூலம், சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தை மண்கொட்டி சரிசெய்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களது வீடுகள் தாழ்வான பகுதியில் உள்ளதால், மழைக்காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளது. எனவே பிரதான சாலையில் சாக்கடையை இணைக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.இதனால் துவங்கிய திட்டப்பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

Related Stories:

>