×

இரட்டை கொலை வழக்கு கைதான தொழிலதிபருக்கு 2 நாள் போலீஸ் காவல்

ஓசூர், பிப்.9: இரட்டை கொலை வழக்கில் கைதான தொழில் அதிபரை, 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க ஓசூர் கோர்ட் உத்தரவிட்டது.
ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்த்பாபு மனைவி நீலிமா. தொழில் அதிபரான இவரும், கார் டிரைவர் முரளியும் கடந்த 11.11.2019 அன்று உத்தனப்பள்ளி அருகே காரில் வந்த போது, எதிரே லாரியில் வந்த கூலிப்படையினர் கார் மீது லாரியை மோதி, பெட்ரோல் குண்டுகளை கார் மீது வீசினர். இதில் முரளி, நீலிமா உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக, கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிகங்காதர், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா நேரடியாக விசாரணை நடத்தினர். சொத்து பிரச்னையில் நீலிமாவின் உறவினர் ஜெ.ஆர்.(எ) ராமமூர்த்தி கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து மதுரை வக்கீல் வெங்கட்ராமன் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 13 பேர் கைதான நிலையில், ஜெ.ஆர். மட்டும் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். அதை எதிர்த்து ஆனந்த்பாபு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், முன்ஜாமீனை கடந்த மாதம் 28ம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து ராமமூர்த்தியை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு,போலீசார் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு தாமோதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சேலம் சிறையில் இருந்து ராமமூர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் தாமோதரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராமமூர்த்தியை, போலீசார் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்