×

மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடக்கம்

தர்மபுரி, பிப்.9:தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். தற்போது நோய்களின் தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மற்ற கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆன்-லைன் மூலமாக பாடங்களை கற்று வந்தனர். இந்நிலையில், கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் பாடப்பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் நேற்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்திருந்தது.

நேற்று காலை முதல் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாக வகுப்பு தொடங்கியது. மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் அரசு வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி பின்பே வகுப்பில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 80 உள்ளன. இக்கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாள் வகுப்பு நடத்தப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் சில வகுப்புகள், பாடப்பிரிவுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படும். காலை, மாலை என 2 ஷிப்டு முறையில் செயல்படும்,’ என்றனர்.

Tags : classes ,colleges ,district ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...