×

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

தர்மபுரி, பிப்.9: தர்மபுரி அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என நேற்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தர்மபுரி மாவட்டம், சோளக்கொட்டாய் அருகே ஜம்புகாரன் கொட்டாய் கிராம மக்கள், நேற்று கலெக்டர் கார்த்திகாவிடம் கொடுத்த மனுவில், ஜம்புகாரன் கொட்டாயில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள கோட்டக்கார மாரியம்மன் கோயில் நிலத்தையும், ஊர் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள மயான நிலத்தையும், எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, கோயில் நிலத்தையும், மயான நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 இதேபோல், தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொசுப்புழு ஒழிப்பு பணியை கடந்த 10 ஆண்டுகளாக தினக்கூலியாக ₹260க்கு பணியாற்றி வருகிறோம். இந்த சம்பளம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. எனவே, தினக்கூலியாக ₹500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தர்மபுரி அரசு பள்ளிகளில் படித்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில், கடந்த 2017-2018ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்2 முடித்து 3 ஆண்டுகளாகியும், இலவச லேப்டாப் வழங்கவில்லை. மேலும் பல மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ₹6000 வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக இலவச லேப்டாப் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளனர். அதியமான்கோட்டை வடக்குத்தெரு கொட்டாவூர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், வடக்குத்தெரு கொட்டாவூர் கிராமத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, இந்த கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

அரூர் அருகே எட்டிப்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், அரூர் அருகே ஏ.வெளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, 50சென்ட் நிலம் கடந்த 1979ம் ஆண்டு தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலம் முதன்மை கல்வி அலுவலரின் பெயரில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளிக்கு சொந்தமான 50சென்ட் நிலம், சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதேபோல், சிந்தல்பாடி லட்சுமண சோழன் கொடுத்த மனுவில், சிந்தல்பாடி ரயில்வே மேம்பாலத்தில், நான்கு ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும். வேகத்தடை மற்றும் உயர் மின் கோபுரம் கட்டுவதோடு பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் அமைத்து, விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : temple land ,invaders ,
× RELATED உசிலம்பட்டி அருகே கோயில் நிலத்தில்...