×

தர்மபுரியில் 13ம் தேதி ஜல்லிக்கட்டு

தர்மபுரி, பிப்.9:தர்மபுரியில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் இளங்கோவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜெமினி, நகராட்சி ஆணையர் (பொ) சுரேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகா பேசியதாவது: தர்மபுரி சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட (ஏ.ரெட்டிஅள்ளி) பென்னாகரம் மெயின்ரோடு டி.என்.சி.மைதானத்தினல் வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடி வீரர்களுக்கான பதிவு மற்றும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படவுள்ள காளைகளின் உரிமையாளர்கள், உதவியாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஆகியோருக்கு மருத்துவ தகுதி, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை ஆகியவை நடைபெற உள்ளது. தர்மபுரி சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் வரும் நாளை (10ம் தேதி) மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்படுகிறது. 11ம் தேதி காளைகள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் பெயர் பதிவு செய்யப்படுகிறது. 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பரிசோதனை செய்யப்படுகிறது.

மாடு பிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் பதிவின் போது ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும். மேற்கொண்ட இடங்கள் தவிர அரசால் அங்கீகரிக்கப்பட்ட, கொரோனா பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து தகுதிச்சான்று வழங்கும், மாடு பிடி வீரர்கள் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திட ஒத்துழைப்பு தடவேண்டும். ஜல்லிக்கட்டு முழு ஏற்பாடுகளையும், தர்மபுரி ஜல்லிக்கட்டு பேரவை செய்து வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Tags : Dharmapuri ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...