குடும்ப தகராறில் தூக்கு மாட்டி

திருச்சி, பிப். 9:  திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியை சேர்ந்தவர் செல்வரத்தினம் (56). ரயில்வேயில் பாய்ண்ட் மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மகள் திருமணமாகி குஜராத்தில் வசித்து வருகிறார். மகன் திருச்சி விமான நிலையத்தில் பணியில் உள்ளார். இந்நிலையில் மது பழக்கம் உள்ள செல்வரத்தினம் தினமும் குடித்துவிட்டு வருவதால், தினமும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் குடித்து விட்டு வந்ததால் தகராறு ஏற்பட்டது. வீட்டில் அனைவரும் படுக்க சென்ற பிறகு வராண்டாவில் செல்வரத்தினம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி திருவானைக்காவல் கரிகாலன் தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (36) டிரைவர். இவரது மனைவி அனுசியா(30). மனோஜ்குமார் தினமும் குடித்துவிட்டு வருவாராம். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் மனமுடைந்த மனோஜ்குமார் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி அனுசியா அளித்த புகாரின் பேரில் ரங்கம் எஸ்ஐ கோபிநாத் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண் தற்கொலை: திருச்சி பொன்மலைப்பட்டி இளங்கோ தெருவை சேர்ந்த சகாயமேரியின் மகள் ஜெயா (23). இவருக்கும் பட்டுக்கோட்டையை சேர்ந்த லோடுமேன் மாதவனுக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்து, தற்போது ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ஜெயா கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டாக தாய் வீட்டில் வசித்து வந்தார். இதில் நேற்று முன்தினம் தங்கை திவ்யாவிற்கும் ஜெயாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த ஜெயா, தூக்குமாட்டி தற்கொலை கொண்டார். இதுகுறித்து பொன்மலை உதவி கமிஷனர் தமிழ்மாறன் விசாரித்து வருகிறார்.

Related Stories:

>