×

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 2025-26 அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் சிறப்பு ஊக்கத்தொகையாக 5,77,755 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் சுமார் ரூ.1,094.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2025-26ம் அரவை பருவத்திற்கு கரும்பு அனுப்பும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி விரைந்து வழங்க ஏதுவாக போதிய நிதி ஆதாரம் இல்லாத தர்மபுரி, எம்.ஆர்.கே., மதுராந்தகம், திருத்தணி, செய்யாறு, செங்கல்ராயன், மோகனூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் சேர்த்து மொத்தம் 11 சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதன்மூலம் சுமார் 17,991 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். திமுக அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகை தாமதமின்றி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட சுமார் ரூ.2031.47 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tourism Minister ,Rajendran ,Tamil Nadu… ,
× RELATED ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்பது...