கடல் மீன்பிடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மனு

புதுக்கோட்டை, பிப். 9: கடல் மீன்பிடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மனு அளித்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் விசைப்படகு மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதால் எங்களது மீன்பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கடல் வளம் படிப்படியாக அழிந்து வருகிறது. இதுபோன்ற விசைப்படகு மீனவர்களின் செயலை கண்டித்து கடந்தாண்டு நவம்பர் மாதம் 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அடுத்த இருவாரங்களில் 5 மாவட்ட மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த உத்தரவாதம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும். கடல் மீன்பிடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>