மக்கள் குறைதீர் கூட்டம்: 318 கோரிக்கை மனுக்கள் குவிந்தன விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை, பிப். 9: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின்படி கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் உமா மகேஸ்வரி பெற்று கொண்டார்.

இதைதொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 318 மனுக்கள் வரப்பெற்றன. இந்த கோரிக்கை மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தகுதியுடைய பொதுமக்களின் மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைதீர் கூட்டத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின்கீழ் 4 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின் திருவைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>