×

இலுப்பூரில் 423 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்டஉதவி அமைச்சர் வழங்கினார்

இலுப்பூர், பிப். 9: இலுப்பூரில் 423 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்ட உதவியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இலுப்பூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது. 423 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்டஉதவிகள் வழங்கி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: கிராமப்புறங்களில் உள்ள மகளிரின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இலுப்பூரில் அன்னவாசல் மற்றும் விராலிமலை வட்டாரங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 500 உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து காய்கறி செடிகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கம், பட்டம் மற்றும் பட்டயம் முடித்த பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி பெண்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டஉதவிகளை பெறும் பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Minister of Welfare ,women ,groups ,Iluppur ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ