×

7வது நாளாக மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் 77 பேர் கைது

மயிலாடுதுறை, பிப். 9: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். ஆந்திர முதல்வர் துணிச்சலாக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் அதேபோன்று தமிழகத்திலும் அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை அதிமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 7வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவர் இளவரசு தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்டோர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 50 பேரை மயிலாடுதுறை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

நாகை: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே நேற்று 7வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்ரா தலைமை வகித்தார்.
போராட்டத்தில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : servants ,protest ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து