×

தனியார் நிலம் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு, முற்றுகை

க.பரமத்தி, பிப்.9: தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலமாக திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் நீண்ட நாட்களாவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறி பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனம் மூலம் புதிய உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் க.பரமத்தி அருகே நெடுங்கூர் ஊராட்சி ரெங்கநாதபுரம் பகுதியில் சங்கீதா செந்தில்நாதன் (பாஜக) என்பவருக்கு சொந்தமான இடத்தில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்தார் டவர்லைன் அமைக்கும் பணிக்கு அவ்விடத்தில் வேலை செய்ய மதுரை உயர்நீதி மன்ற கிளை ஆணை பெற்றதுடன் கரூர் கலெக்டரின் அனுமதியுடன் நேற்று வேலை செய்ய முயன்றபோது செந்தில்நாதன் மற்றும் அவரது கட்சி ஆதரவளர்களுடன் பணிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஆர்டிஓ பாலசுப்பிரமணியம், டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்பெக்டர் ரமாதேவி, எஸ்ஐக்கள் ரங்கநாதன், ராஜேந்திரன், தாசில்தார் (பொ) பன்னீர்செல்வம் ஆகியோர் பணிகளை தடுப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் புதிய உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்போர் நாங்கள் அல்ல, ஆனால் விவசாய விலை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கபடுகிறோம். எனவே பணிகளை செய்ய உயர்நீதி மன்றத்தில் பெற்ற ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்கிறோம். அத்தோடு இந்த திட்டத்தை சாலையோரமாக கேபிள் மூலமாக நிறைவேற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். உயர்மின் கோபுரம் அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக வலியுறுத்தி வருகிறோம் என்றனர். இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திவிட்டு உரிய தீர்வு காணப்படும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : power tower ,siege ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!