திருப்பூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1006 ஏக்கர் நிலம் 10 ஆண்டுகளில் மீட்பு

திருப்பூர், பிப். 9:  திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 1006.33 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது என  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் பகுதியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். துணை சாபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தொடர்ந்து அைமச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது: திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை இணை ஆணையர் மண்டலம்-2 ஆகிய மண்டலங்கள் துவங்கப்பட்டுள்ளது. ஐந்தாவதாக கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கி திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இணை ஆணையர் மண்டலம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. இன்னும், கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு, தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலங்கள் துவங்கப்படவுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டங்களில் மொத்த கோவில்கள்-2041, உதவி ஆணையர்கள்-2, உதவி ஆணையர்/ செயல் அலுவலர்கள்-3, செயல் அலுவலர்கள்-30,  ஆய்வாளர்கள்-16, ஒருகால பூஜை கோவில்கள் -753 உள்ளன. திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்தில் 43 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் 400 கோவில்களில் 15 கோடி, கரூர் மாவட்டத்தில் 450 கோவில்களில் ரூ.6 கோடி என மொத்தம் ரூ.21 கோடி மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் ரூ.150 கோடி மதிப்புள்ள 1006.33 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள 245.93 ஏக்கர் நிலங்களும் ரூ.2 கோடி மதிப்புள்ள 19.382 சதுர அடி கட்டிடங்களும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் தெற்கு எம்எல்ஏ குணசேகரன்,  திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>