×

பந்தலூரில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க 3 வது நாளாக வனத்துறை முயற்சி


பந்தலூர்,பிப்.9: பந்தலூர் அருகே தந்தை,மகன் உள்ளிட்ட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்கும் 3வது நாள் முயற்சியிலும் வனத்துறை தோல்வி அடைந்தது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, சேரம்பாடி அடுத்த கண்ணம்பள்ளியை சேர்ந்த நாகமுத்து,ஆனந்தராஜாஅவரது மகன் பிரசாந்த் என மூன்று பேரை டிசம்பர் மாதம் காட்டு யானை ஒன்று மிதித்து கொன்றது. இதையடுத்து யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் யானை அங்கிருந்து தப்பி கேரள மாநில வனப்பகுதிக்குள் சென்றது. கடந்த 5 நாட்களுக்கு முன் சப்பந்தோடு பகுதியில் யானைக் கூட்டங்களுடன் ஆட்கொல்லி யானையும் இருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து முதுமலையில் இருந்து விஜய்,சுஜய்,பொம்மன்,கலீம்,சீனிவாசன் உள்ளிட்ட 6 கும்கிகளை சேரம்பாடி அழைத்து வந்து ஆட்கொல்லி யானையை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.ஆனால் யானையை பிடிக்க சரியான சூழல் அமையாததால் மருத்துவ குழுவினர் தொடர்ந்து யானையை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கொளப்பள்ளி பத்துலைன் வனப்பகுதியில் இருந்து  காப்பிக்காடு பகுதிக்கு யானையை விரட்டி வரும் போது யானை திரும்பி வனத்துறையை விரட்டியதில் இருவர் அருகே இருந்த ஆற்றில் குதித்து தப்பினர். இருப்பினும் ஆட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

களம் இறங்கிய இரட்டையர்கள்
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த தேவகி என்ற கும்கிக்கு கடந்த 1971ம் ஆண்டு இரட்டை குட்டிகளாக சுஜய்,விஜய் பிறந்தது. இவற்றிற்கும் பாகன்கள் மூலம் கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. நன்கு பயிற்சி பெற்ற பின்னர் இரட்டையரில் ஒன்றான சுஜய் கோவை சாடிவயல் முகாமிற்கு மாற்றப்பட்டது. 2015ம் ஆண்டு சாடிவயல் முகாமிற்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானையுடன் மோதியதில் சுஜய் தனது ஒரு தந்தத்தை இழந்தது. அதன்பின் மீண்டும் தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் கோவையில் அட்டகாசம் செய்து வந்த விநாயகாவை பிடிக்க விஜய் களம் இறக்கப்பட்டது. இதே போல கடந்த மாதம் மசினகுடியில் தீ பந்தம் கொளுத்தி வீசப்பட்டதால் காயமடைந்த காட்டு யானையை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் விஜயை பயன்படுத்தினர். இதுவரை சுஜய்,விஜய் ஆகிய இரட்டையர்களை ஒரு சேர அழைத்துச் சென்று காட்டு யானையை பிடிப்பதற்கு களம் காணாத நிலையில், தற்போது சேரம்பாடி பகுதியில் மூன்று பேரை கொன்ற சங்கர் என்ற ஆட்கொல்லி யானையை பிடிப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : forest department ,Pandharpur ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...