×

காங். உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை இது இந்தியா, வடகொரியா இல்லை: பிரதமர் மோடி மீது ராகுல் சாடல்

புதுடெல்லி: டெல்லியில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீதான நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியின் அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டு வளாகத்தில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இன்றைய இந்தியாவில் ஒரு சமரசமற்ற பிரதமரின் ஆட்சியின் கீழ் அமைதியான போராட்டம் மிகப்பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமானது அதிருப்தியை தேசத்துரோகம் என்றும், கேள்விகள் கேட்பதை சதி என்றும் முத்திரை குத்தப்படும் திசையில் தள்ளப்படுகின்றது.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நீங்கள் குரல் எழுப்பினால் தடியடி, வழக்குகள் மற்றும் சிறைவாசம் கிட்டத்தட்ட உறுதியானது. வினாத்தாள் கசிவுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களது எதிர்காலத்துக்காக குரல் எழுப்பினார்கள். அவர்கள் தடியடிகளால் தாக்கப்பட்டனர். நாட்டின் பெருமைமிக்க பெண் மல்யுத்த வீராங்கனைகள் ஒரு சக்தி வாய்ந்த பாஜ தலைவருக்கு எதிரான கடுயைமான குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்கள்.

அவர்களின் அழுகைகள் அவதூறு செய்யப்பட்டன. அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கேள்விகள் கேட்பது ஜனநாயகத்தின் பலவீனம் அல்ல. அது அதன் பலம். அரசு விமர்சனங்களை கேட்டு, பதிலளித்து பொறுப்பேற்கும்போது ஜனநாயகம் வலுவடைகின்றது. மோடி ஜீ இது இந்தியா, வடகொரியா அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை தேசமாகவும், கருத்து வேறுபாடுகளை எதிரியாகவும் பார்க்கத்தொடங்கும்போது ஜனநாயகம் இறந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Congress ,India ,North Korea ,Rahul Gandhi ,PM Modi ,New Delhi ,Lok Sabha ,Modi ,Delhi ,US ,AI ,Summit ,Delhi… ,
× RELATED தற்கொலை நாடகமாடிய போது புடவை...