×

9,11-ம் வகுப்பிற்கான பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன

கோவை, பிப். 9:  கோவை மாவட்டத்தில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. இதையடுத்து, தமிழகத்தில் நேற்று 9-ம் வகுப்பு, பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

கோவை மாவட்டத்திலும் 9-ம் வகுப்பு, பிளஸ்-1 மாணவர்களுக்கான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின் வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருந்தனர். நீண்ட காலமாக ஆன்லைன் வழியாக படித்து வந்த மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்றதால் உற்சாகம் அடைந்தனர்.

இது குறித்து மாணவி ஸ்ரீநிதி கூறுகையில், “பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பின் தற்போதுதான் பள்ளிக்கு வந்துள்ளேன். பிளஸ்-1 வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில்தான் நடத்தி வந்தனர். இதில், பல நேரங்களில் பாடங்கள் புரியாமல் இருந்தது. சற்று கடினமாகவும் இருந்தது. மாஸ்க் அணிந்து இன்று (நேற்று) பள்ளிக்கு வந்து வகுப்பிற்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர்களை ஆன்லைனில் மட்டுமே பார்த்த நிலையில், நேரடியாக பார்த்து பேசவும் முடிந்தது. ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்க முடிந்தது” என்றார்.  

கல்லூரிகள் திறப்பு: கோவை அரசு கலைக்கல்லூரி, வேளாண் பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப, பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். முதலாமாண்டு மாணவர்கள் முதல் முறையாக கல்லூரிக்கு வந்து நேரடியாக வகுப்புகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. கல்லூரிகள், விடுதிகளில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது.

இது குறித்து அரசு கலைக்கல்லூரி முதலாமாண்டு மாணவன் ஒருவர் கூறுகையில், “முதல் நாள் கல்லூரிக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு கல்லூரி திறக்க வாய்ப்பு இல்லை என நினைத்தேன். முதல் பருவ தேர்வு கூட ஆன்லைனில்தான் எழுதினேன். திடீரென கல்லூரியை திறந்துள்ளனர். நேரடியாக வகுப்பில் பங்கேற்றது நன்றாக இருந்தது. புதிய நண்பர்களை பார்க்க முடிந்தது. ஆசிரியர்களை கூட இன்றுதான் நேரில் பார்த்தேன். புதுவித அனுபவமாகவும், மறக்க முடியாத நாளாகவும் இருந்தது” என்றார்.

Tags : Schools ,colleges ,class ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...