கடன் வாங்கி பயிரிட்ட கரும்பு விளைச்சல் இல்லாததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்யாறு அருகே சோகம்

செய்யாறு, பிப்.9: செய்யாறு அருகே கடன் வாங்கி பயிரிட்ட கரும்பு விளைச்சல் இல்லாத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம்(35), விவசாயி. இவரது மனைவி வேம்பு. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விவசாய தொழில் செய்து வரும் ராஜாங்கம் தனது 3 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.

இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் போதிய மண்வளம் இல்லாததால், கரும்பு சரியாக விளையாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ராஜாங்கம் விரக்தியில் இருந்தாராம். இந்நிலையில் ராஜாங்கம் நேற்று அதிகாலை தனது விவசாய நிலத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து நிலத்துக்காரர் முருகன், அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, மனைவி வேம்பு அனக்காவூர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: