×

வந்தவாசி அருகே சொத்து தராததால் ஆத்திரம் தாயை கொல்ல பாலில் விஷம் கலந்த மகன் கைது

* தனியார் கொள்முதல் நிலையத்தில் கண்டுபிடிப்பு
* பல உயிர்கள் பறிபோகும் அசம்பாவிதம் தவிர்ப்பு

வந்தவாசி, பிப்.9: வந்தவாசி அருகே தனியார் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பாலில் விஷம் கலந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தாயை கொல்ல விஷம் கலந்த மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி(60), பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வினோத்(38), சதீஷ்(36) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் வினோத் திண்டிவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு மேரிக்கு சொந்தமான வீட்டு மனையை சதீஷின் மனைவி ரேவதி பெயருக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த வாரம் வினோத்திற்கு தெரியவந்ததையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சரிபார்த்துள்ளார். இதில் தம்பி மனைவியான ரேவதி பெயரில் சொத்து எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் கடந்த 6ம் தேதி, ‘எனக்கு தெரியாமல் தம்பி மனைவியின் பெயருக்கு வீட்டுமனையை ஏன் எழுதிவைத்தாய்’ எனக்கேட்டு தாய் மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த வினோத், தாய் மேரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் காலை தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கறந்து வைத்திருந்த பாலில் வினோத் விஷம் கலந்தாராம்.

இதையறியாத மேரி வழக்கம்போல் தனக்கு தேவையான சிறிதளவு பாலை எடுத்து வைத்துக்கொண்டு, மீதமுள்ள பாலை தனியார் ெகாள்முதல் நிலையத்துக்கு ெகாண்டு சென்றார். அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜான்பால்(55), பால் கேனை திறந்து பார்த்தபோது நீலநிறமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் பாலை பரிசோதித்ததில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜான்பால் நேற்று முன்தினம் மாலை தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து தாயை கொல்ல பாலில் விஷம் கலந்த மகனை கைது செய்து விசாரித்து வருகிறார். தனியார் கொள்முதல் நிலையத்தில் இருந்த பாலுடன் விஷம் கலந்த பால் கலந்திருந்தால், பல உயிர்கள் பறிபோயிருக்கும். ஆனால் முன்கூட்டியே விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags : property ,Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு