வேலூர் மாவட்டத்தில் 9ம், 11ம் வகுப்பில் 80 சதவீதம் மாணவர்கள் வருகை கல்லூரிகளுக்கும் உற்சாகமாக வந்த மாணவர்கள்

வேலூர், பிப். 9: வேலூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள், கல்லூரி திறக்கப்பட்டதால், 9, 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி முதலாண்டு, 2ம் ஆண்டு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு 10 மாதங்களுக்கு கடந்த 19ம் தேதி முதல் 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைதொடர்ந்து, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரிகளில் முதலாண்டு, 2ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கியது. பள்ளிக்கு வருவதற்காக பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வந்திருந்தனர். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளிகளின் வாயில்களில் கை கழுவ வசதியாக சோப்பு தண்ணீர் வைக்கப்பட்டு மாணவர்கள் கைகளை கழுவிய பின்னர், தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப நிலையை ஆய்வு செய்து பின்னர பள்ளிக்கு வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரை, ஜிங்க் மாத்திரை தலா 10 வழங்கப்பட்டது. அத்துடன் கைகளை தூய்மைப்படுத்த சானிடைசர் வழங்கப்பட்டது. முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் வீட்டில் இருந்தே உணவு மற்றும் குடிநீர் கொண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 266 அரசு உயர், மேல்நிலை, நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார்கள் உள்ளன. இதில் 9 வகுப்பில் 10 ஆயிரத்து 178 மாணவர்களும், 10 ஆயிரத்து 34 மாணவிகளும், 11ம் வகுப்பில் 7 ஆயிரத்து 871 மாணவர்களும், 8,994 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 77 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 80 சதவீதம் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். அதேபோல், வேலூர் மண்டல கல்வியல் கல்லூரி இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட 10 மாவட்டங்களில் 137 அரசு, தனியார் கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் நேற்று கல்லூரிக்கு வந்தனர். வேலூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு, 9ம், 11ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் முதலாண்டு, 2ம் ஆண்டு மாணவர்கள் உற்சாகமாக நேற்று பள்ளி வந்தனர். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து, கொரோனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>