×

தவெக கூட்டத்தில் கொடி எரிந்தது: நகர செயலாளர் மீது வழக்கு

 

கரூர்: கரூர் 80 அடி சாலையில் தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இரவு 9 மணியளவில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது லேசான மழை பொழிந்ததால் கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலியை தலைக்கு பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் மேடையின் வலதுபுறம் 10 அடி உயர கம்பத்தில் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது. அதில் மின் வயர் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது மழை பொழிந்ததால் மின் கசிவு ஏற்பட்டு, கொடி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மேடையில் இருந்த நிர்வாகி ஒருவர் தீப்பிடித்த கொடி கம்பத்தை பிடுங்கினார். அப்போது அருகில் இருந்த தலைமை கழக பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். இந்த சம்பவம் நடந்தபோது நாஞ்சில் சம்பத் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். கொடி எரிந்தது, நிர்வாகி காயமடைந்தது ஆகியவற்றை பார்த்தும் அவர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். தற்போது மீண்டும் கரூரில் நடந்த கூட்டத்தில் கட்சி கொடி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொடி எரிந்த சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மனோஜ்குமார் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொதுக்கூட்டத்தில் தீப்பற்றும் வகையில் கவனகுறைவாக செயல்பட்டதாக கரூர் தவெக நகர செயலாளர் சரவணன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Karur ,Akkatsi ,Nanjil Sampath ,
× RELATED அன்னைக்கு நான் இல்லன்னா உசுரு காலி;...