×

போக்குவரத்து பணிமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சாத்தூர், பிப்.9:  சாத்தூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை உள்ளது. அதன் அருகில் அரசு மருத்துவமனையும் உள்ளது. அதனை சுற்றி நான்கு நகர்கள் உள்ளன. மருத்துவமனை செல்லும் கிராம, நகர பொதுமக்கள் பணிமனை அருகில் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. அதைபோல இந்த சாலையை கடந்து தான் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு கடக்கும் போது பாலத்தில் இருந்து வேகமாக இறங்கும் வாகனங்கள் மோதி உயிர்பலி ஏற்படுகிறது. இந்த இருவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன.

 இதுகுறித்து சாத்தூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் சங்கர் கூறுகையில், சாத்தூர் நகர பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல் நடுவில் தடுப்புச்சுவர் அமைத்துள்ளனர். இந்த தடுப்பு சுவரை போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள  பாலத்தின் கடைசி பகுதியில் இருந்து சாலையின் இருபுறமும் அமைத்து பொதுமக்கள் நடந்து செல்ல மேம்பாலம் அமைத்து கொடுத்தால் எந்த உயிர்பலியும் இருக்காது. இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்றார். சமூகஆர்வலர்கள் கூறுகையில், சாத்தூர் போக்குவரத்து பணிமனை அருகில் சாலையின் குறுக்கே மக்கள் நடந்து செல்ல ரயில் நிலையங்களில் அமைப்பது போன்று இரும்பினால் ஆன மேம்பாலத்தை விரைவில் அமைத்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சாலையை கடந்து செல்வார்கள் என்றனர்.

Tags : accidents ,National Highway ,Transport Workshop ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...